Adirai pirai
articles உள்ளூர் செய்திகள்

காய்கறிகளாக மாறிய அதிரை குப்பைகள் (ஒரு குப்பை கதை)

நாளொன்றுக்கு அதிரை மக்கள் பயன்படுத்தி தூக்கி வீசும் பல டன் குப்பைகள் பேரூராட்சி துப்புறவு தொழிலாளர்களால் சேகரிக்கப்பட்டு அவை மதுக்கூர் சாலையில் உள்ள குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகின்றன. அங்கு மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தனித்தனியாக பிரிக்கப்படுகின்றன. இவற்றில் காய்கறி, சமையல் கழிவுகள் போன்ற மக்கும் குப்பைகள் உரம் தயாரிப்பதற்காகவும், ப்ளாஸ்டிக் போன்ற மக்காத குப்பைகள் மறு சுழற்சிக்காகவும் அனுப்பி வைக்கப்படுகின்றன. எலக்டிரானிக் மற்றும் மருத்துவ கழிவுகள் மட்டும் தேக்கமடைகின்றன.இந்த நிலையில், இங்குள்ள மக்கும் குப்பைகள் மூலம் தயாரிக்கப்பட்ட உரம் மூலம், அருகில் உள்ள வளம் மீட்பு பூங்காவில் காய்கறி செடிகள் நடப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தன. இந்த செடிகள் அனைத்தும் நல்லபடியாக வளர்ந்திருப்பதுடன், தற்போது சிலவற்றில் காய்கறிகள் வளர்ந்து கண்களுக்கு குளிர்ச்சியளிக்கின்றன. மேலும் சில செடிகளில் பூ விட்டுள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் அவற்றிலும் காய்கறிகளை எதிர்பார்க்கலாம். நாம் நமதூரில் துச்சமாக நினைத்து தூக்கி வீசும் குப்பைகள் மிகப்பெரிய செல்வங்கள். அதன் மூலமே இத்தனை பணப்பயிர்கள் இங்கு விளைவிக்கப்பட்டுள்ளன. பல உலக நாடுகள் குப்பைகள் செல்வங்களின் பட்டியலில் சேர்த்து அவற்றை முறையாக பராமரித்து பயன்படுத்தி கோடி கோடியாக பொருள் ஈட்டுகின்றனர். ஆனால் நாம், பயன்படுத்தினோம், கடமை முடிந்தது, தூக்கி வீசிவிட்டோம் என்ற கதையாக சென்றுகொண்டிருக்கிறோம்.இந்த குப்பை கிடங்கை பொறுத்தவரை குப்பைகளை தரம் பிரிப்பதற்கே பல மணி நேரம் செலவிடப்படுகிறது. அப்போது குப்பைகளுடன் நெருக்கமாக இருப்பதால் தொழிலாளர்கள் பல விதமான நோய்களின் தாக்கத்திற்குஆளாகின்றனர். ஆனால், நமது வீட்டில் பயன்படுத்தப்படும் குப்பைகளை நாமே தரம் பிரித்து குப்பை அள்ள வருபவர்களிடம் வழங்கினால் அவர்களின் வேலை சுலபமாகும். அவர்களும் ஆர்வமுடன் குப்பைகளை பெற வீடுகளுக்கு வருவார்கள். ஊர் சுத்தமாகும், நமது குப்பைகள் வளமான தரமான காய்கறிகளாகும். பொதுமக்களாகிய உங்களது ஒத்துழைப்பு இருந்தால் இது நிச்சயம் சாத்தியமாகும்.ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலிபொதுநலன் கருதி வெளியிடுவோர்…அதிரை பிறை