Adirai pirai
உள்ளூர் செய்திகள்

அதிரை – திருத்துறைப்பூண்டி அகல ரயில் பாதை பணியை ஆகஸ்டுக்குள் முடிக்க திட்டம்!

காரைக்குடி – திருவாரூர் இடையே 147 கி.மீ. தொலைவுக்கு ரூ. 711 கோடி செலவில் அகல ரயில் பாதை அமைத்தல் மற்றும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக,  தஞ்சாவூர் மாவட்டம், அதிரை ரயில் நிலையத்தில் கட்டுமானப்பணிகள் கடந்த 3.7.2017 -ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி ரயில்நிலைய கட்டுமானப்பணிக்கான பொருட்களுடன் அதிரையில் அமைக்கப்பட்டுள்ள புதிய அகல ரயில்தடத்தில் 8 ஆண்டுகளுக்கு பிறகு சரக்கு ரயில் வந்தது.

இது குறித்து தெரிவித்துள்ள ரயில்வே வாரிய தலைவர் அஸ்வினி லோஹானி, அதிரை, முத்துப்பேட்டை வழியாக செல்லும் பட்டுக்கோட்டை – திருத்துறைப்பூண்டி இடையிலான 50 கிலோ மீட்டர் அகல ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகள் ஆகஸ்டு மாதத்திற்குள் முடிவடையும் என்றார். அடுத்ததாக திருத்துறைப்பூண்டி – திருவாரூர் மத்தியிலான 26 கி.மீ அகல ரயில் தண்டவாளம் அமைக்கும் பணிகளை செப்டம்பர் மாதத்தில் முடிக்க திட்டமிட்டிருப்பதாக கூறிய அவர், இந்த 76 கி.மீ தொலைவிலான திருவாரூர் – பட்டுக்கோட்டை ரயில் பாதை, 187 கி.மீ தொலைவிலான மயிலாடுதுறை -திருவாரூர் – திருத்துறைப்பூண்டி – பட்டுக்கோட்டை – காரைக்குடி இடையிலான ரயில் பாதை பணியின் ஒரு பகுதியே என அவர் விளக்கமளித்துள்ளார்.