Adirai pirai
உள்ளூர் செய்திகள்

ராஜாமடம் கிளை வாய்க்காலுக்கு வந்த தண்ணீர்… அதிரைக்கு வராத காரணம் என்ன? திடுக்கிடும் தகவல்

தஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதியான அதிராம்பட்டினம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் சுற்று வட்டார கிராமங்களில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சம்பா சாகுபடி நடைபெறவில்லை. இந்த ஆண்டு மேட்டூர் அணை வேகமாக நிரம்பி முழு கொள்ளளவை எட்டி இருப்பதால் சம்பா சாகுபடியை மேற்கொள்வதற்கு கடைமடை பகுதி விவசாயிகள் ஆர்வமாக உள்ளனர்.

ஆனால் மேட்டூர் அணையில் இருந்து கடந்த 19-ந் தேதி திறந்து விடப்பட்ட தண்ணீர் அதிரை கடைமடை பகுதிகளில் உள்ள ஆறுகள், பாசன வாய்கால்கள் சென்றடையவில்லை. 11 நாட்களுக்கு பின்னரும் தண்ணீர் வராததால் கடைமடை பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். தண்ணீர் வராததால் நெல் சாகுபடி பணிகளை தொடங்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

அதிரைக்கு தண்ணீர் வரும் பாதையான இராஜாமடம் கிளை வாய்க்காலில் தண்ணீர் அதிகளவில் வரும் நிலையில், அதிரையை தண்ணீர் நெருங்கவில்லை. இதற்கு காரணம் அறிய ராஜாமடம் கிளைவாய்க்கால் வழியாக அதிரையை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சென்று பார்த்தபோது, வழியில் உள்ள கிராமத்தார்கள் சட்டவிரோதமாக தங்கள் ஊர்களுக்கு வாய்க்காலை வெட்டியும், அனுமதி பெறாமல் மதகுகளை அமைத்தும் திருப்பி விடுகின்றனர். இதனால் அதிரை மற்றும் கடைமடை பகுதிகளுக்கு வரும் தண்ணீர் இது வரை வந்து சேரவில்லை.

இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதுவரை கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். இதனால், நெல் சாகுபடி பணிகளை தொடங்க முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகிறார்கள். இனியும் தாமதிக்காமல் கடைமடை பாசன பகுதி வாய்க்கால்களில் போதிய அளவு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அதிரை சுற்றுவட்டார பகுதிகளில் நீர்நிலைகளும் இதுவரை நிரம்பாமல் உள்ளன.