Adirai pirai
articles உள்ளூர் செய்திகள்

அதிரை பேருந்துகளில் மாணவர்களின் வாழ்வா சாவா பயணம்!

அரசு மற்றும் அதிகாரிகளுக்கு:

அதிரையில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள், வியாபாரிகள் பலர் பட்டுக்கோட்டை உள்ளிட்ட பக்கத்து ஊர்களுக்கு பேருந்தில் செல்கின்றனர். இதில் பள்ளி கல்லூரிகள் தொடங்கும் காலை நேரத்திலும், கல்லூரி விடும் நேரமான மதியம் 2:00 மணியிலிருந்து பள்ளிக் கூடங்கள் விடப்படும் நேரமான மாலை 5:00 மணி பேருந்துகளில் நிரம்பி வழிகின்றன.

ஒரு பேருந்தில் கல்லூரி, பள்ளி மாணவர்கள் தலையணைக்கு பஞ்சு வச்சது போல் திணிக்கப்பட்டு படியில் உயிரை கையில் பிடித்தவாறு பயணம் செய்கின்றனர். இதனால் பயணிகளின் விலை மதிப்பற்ற உயிர் பறிபோகும் அபாயம் உள்ளது. எனவே இதனை உயர் போக்குவரத்து அதிகாரிகள் கவனத்தில் கொண்டு போக்கு வரத்து நெரிசலை தடுக்கும் விதமாக, காலை மற்று மாலை நேரங்களில் அதிக படியான பேருந்தினை இயக்க வேண்டும் என்பது அனைவரது கோரிக்கையாக உள்ளது.

மாணவர்களுக்கு:

பெற்றோர்கள் தன் மகன் பள்ளிக்கோ அல்லது கல்லூரிக்கோ செல்லும் போது பல கனவுகளுடன் அனுப்பிவைக்கிறார்கள். இதை அறியாத மாணவர்கள் தான் இவ்வாறு பயணம் மேற்கொள்கிறார்கள். இப்படி செல்பவர்களிடம் ஏன் இப்படிப்பட்ட ஆபத்தான பயணம் செய்கிறீர்கள்? என்று கேட்டால் கல்லூரிக்கு நேரமாச்சு வேறு என்ன செய்ய முடியும் என்கிறார்கள், மேலும் சிலர் பேருந்து சரியான நேரத்திற்க்கு வருவதில்லை என்று குறை சொல்கிறார்கள். நாம் சிந்திக்க வேண்டும் என்றாவது நாம் சரியான நேரத்திற்க்கு பேருந்து நிறுத்ததிற்க்கு வருகிறோமா…? பதில் இல்லை. ஏன் அலட்சியம்? விளைவு உயிர்ச்சேதம், பொருட்சேதம் இன்னும் ஏராளம். இதனால் மாணவர்களாகிய நாம், நமது பெற்றோர்கள், உறவினர்கள் அனைவரும் கஷ்டப்படுவார்கள் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இதை தடுக்க ஒரே ஒரு எளிமையான வழி என்ன என்றால் வழக்கமான நேரத்தை விட சிறிது நேரம் முன்பே பேருந்து நிறுத்ததிற்க்கு செல்லலாம். மேலும் இப்படிப்பட்ட ஆபத்தான பயணத்தை தடுக்க பள்ளி, கல்லூரிகள் மாணவர்களின் மத்தியில் விழிப்பிணர்வுப் பிரச்சாரம் மேற்கொள்ள முன் வரவேண்டும். அப்படியும் பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்தால் தொங்கிக்கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல வேண்டும் என அவசியம் இல்லை. ஒருநாள் வகுப்புக்காக உயிரை பணயம் வைப்பது முட்டாள்தனம்.

பெற்றோர்களுக்கு:

உங்கள் பிள்ளைகளின் நலனுக்காக, மாணவர்களுக்கு விரைவாக உணவளித்து பள்ளி, கல்லுரிகளுக்கு முன் கூட்டியே அனுப்புங்கள். படிக்கட்டு பயணம் குறித்து அடிக்கடி எச்சரித்து அவர்களை நெறிப்படுத்துங்கள்.