Adirai pirai
தமிழகம்

பல நாள் திருடன் ஒருநாள் பிடிபட்டான், திருச்சி விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தது சிபிஐ!

திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் அடிக்கடி பிடிபடுவதால் சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் சாதாரண பயணிகளிடம் சுங்கத்துறையினர் சோதனை என்ற பெயரில் அவர்களின் பொருட்களை மிரட்டி பறிப்பது வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் நேற்று மாலை 40 பயணிகள் வந்திறங்கினர். அவர்கள் அனைவரையும் அதிரடியாக தடுத்து நிறுத்தி, சிபிஐ அதிகாரிகள் குழு சோதனை மற்றும் விசாரணையைத் தொடங்கியது. மதுரையில் இருந்து வந்த எஸ்பி மைக்கேல் தலைமையில், ஒரு டிஎஸ்பி, 3 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 13 பேர் கொண்ட சிபிஐ குழு இந்த விசாரணையை தொடங்கியது.

பயணிகளுக்கு உதவிட விமான நிலையத்திற்கு வெளியில் காத்திருந்த 3 பேரையும் மடக்கி பிடித்து சிபிஐ குழு விசாரணை நடத்தியது. இதுதவிர வேறு விமானங்களில் வந்திறங்கிய மேலும் 30 பேர் என மொத்தம் 70 பேர் விசாரணை வளையத்திற்குள் மடக்கி வைக்கப்பட்டனர். விமான பயணிகள் 70 பேருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டு விடிய விடிய தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையும், அதை ஒட்டி சோதனையும் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.

8 பெண்கள் உள்ளிட்ட 29 பேரிடம் விசாரணை தீவிரமடைந்திருப்பதாகவும், மற்றவர்கள் அனுப்பி வைக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 3 சுங்கத்துறை அதிகாரிகளும் விசாரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, மலேசியாவில் இருந்து நேற்று இரவு 11.40 மணியளவில் திருச்சி வர வேண்டிய ஏர் ஏசியா விமானம் ரத்து செய்யப்பட்டது. மலேசியாவில் இருந்து ஏர் ஏசியா விமானத்தில் திருச்சி வரவேண்டிய 40 பயணிகளும் திடீரென வராததால் அங்கிருந்து புறப்பட வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்தில் நடைபெறும் சோதனை மற்றும் விசாரணைக்கும் பயந்து, மலேசியாவில் இருந்து திருச்சி வந்திருக்க வேண்டிய 40 பயணிகளும், பயணத்தை ரத்து செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

ஏர்ஏசியா விமானம் மலேசியாவில் இருந்து திருச்சி வந்து, மீண்டும் நள்ளிரவுக்குப் பிறகு மீண்டும் மலேசியா புறப்பட்டுச் செல்லும் என்பதால், அதில் செல்வதற்கு 70 பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர். விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால், அவர்கள் ஏர்ஏசியா அலுவலகத்தில் சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் 4 பேர் உள்பட 19 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.