Adirai pirai
exclusive உள்ளூர் செய்திகள்

ஒராண்டுக்கு மேல் சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற அதிரை பெண் வழக்கறிஞர்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள இடையாத்தி கிழக்கு மந்திக்கோன்விடுதி கிராமத்தை சேர்ந்தவர் முருகையன். இவருடைய மனைவி நாடியம்மாள்(வயது 34). பட்டுக்கோட்டை அருகே உள்ள சூரப்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் லத்தீப் மகன் மைதீன்கனி(40). கட்டிட ஒப்பந்ததாரரான இவர் நாடியம்மாளுக்கு வீடு கட்டிடத்தருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டதில் பாக்கித் தொகை ரூ.5 லட்சம் திரும்பக் கொடுக்க வேண்டியிருந்தது. இதற்காக மைதீன்கனி ரூ.5 லட்சத்துக்கான காசோலையை நாடியம்மாளிடம் கொடுத்தார்.

இந்த காசோலையை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாததால் வங்கியில் இருந்து காசோலை திரும்பி வந்தது. இது குறித்து நாடியம்மாள், அதிரையை சேர்ந்த SDPI கட்சியின் மாநில செயலாளர் வழக்கறிஞர் சஃபியா நிஜாமின் மூலம் பட்டுக்கோட்டை குற்றவியல் விரைவு நீதிமன்றத்தில் முகமதுகனி மீது வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி முகமது கனிக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும் இழப்பீட்டு தொகை ரூ.5 லட்சத்தையும் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதிகிடைக்க ஓராண்டுக்கும் மேலாக சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற அதிரை பெண் வழக்கறிஞர் சஃபியாவுக்கு நிதித்துறை வட்டாரத்திலும், பொதுமக்களும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.