Adirai pirai
articles உள்ளூர் செய்திகள்

செல்லக் குழந்தைகளின் பார்வையை பறிக்கும் செல்போன்… அதிரையிலும் பாதிப்பு!

அதிரையில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு திடீரென மாறுகண், கண்புரை, கண்பார்வை குறைபாடு போன்ற பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இது குறித்து பாதிக்கப்பட்ட பெற்றோர்களிடம் விசாரித்தபோது தங்கள் குழந்தைகள் செல்போன்களை அதிகம் பயன்படுத்துவதாக கூறுகின்றனர். வெளிநாடுகளில் உள்ள தங்கள் தந்தை, உறவினர்களுடன் வீடியோ கால் மூலம் பேசி மகிழும் குழந்தைகள், அதன் பின்னர் அவர்கள் செல்போன் உள்ளே இருப்பதாகவே நினைத்துக்கொண்டு அவற்றை கேட்கின்றனர்.

தாய்மார்களும் செல்போனில் உள்ள தந்தையின் புகைப்படத்தை எடுத்து குழந்தையிடம் கொடுத்துவிடுகின்றனர். இப்படி அந்த குழந்தையின் செல்போன் பயன்பாடு அதிகரிக்க தொடங்குகிறது. குழந்தைகளும் மொபைலில் உள்ள ஒவ்வொரு அப்லிகேசனையும் ஓபன் செய்து பயன்படுத்த தொடங்குகின்றன. காலப்போக்கில் செல்போனுக்கு அடிமையாகும் சூழல் எழுந்துள்ளது. இதன் காரணமாக செல்போன் டிஸ்ப்ளேக்களில் உள்ள அதிக வெளிச்சத்தை பிஞ்சு குழந்தைகள் நெருக்கமாக காண்பதால் கண்பார்வை பாதித்து இருக்கக்கூடும் என்ற அச்சம் எழுகிறது.

செல்போன் பயன்பாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்புகள்:

என் குழந்தை எப்போதும் செல்போனில்தான் விளையாடும்

– ‘அவனுக்கு செல்போன் என்றால் உயிர். இரவில்கூட பக்கத்தில் வைத்துக்கொண்டுதான் தூங்குவான்

– ‘என் குழந்தை எல்லா அப்ளிகேஷனையும்ஆன்செய்து பார்த்து விடும் 

– ‘செல்போனை கையில் கொடுத்தால்தான் என் குழந்தை சாப்பிடும்

இப்போதெல்லாம் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை பற்றி மற்றவர்களிடம் பெருமிதம் பொங்க பகிர்ந்து கொள்ளும் வார்த்தைகள் இவை.

இப்படி பேசும் தாய்மார்களில் பெரும்பாலானவர்களுக்கு, அந்த செல்போன்களால் தங்கள் குழந்தைகளுக்கு எவ்வளவு ஆபத்துக்கள் ஏற்படுகின்றன என்பது தெரிவதில்லை.

செல்போனிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சு குழந்தைகளின் உடல் உறுப்புகளை தாக்கும் அபாயம் நிறைந்தவை. முக்கியமாக மூளை வளர்ச்சியடையும் சிறு பருவத்தில் கதிர்வீச்சு குழந்தைகளை வெகுவாக பாதிக்கும். அதனால் குழந்தைகளின் சிந்திக்கும் ஆற்றல் குறையும். உடலில் ஹார்மோன்கள் சுரப்பது இயல்புக்கு மாறாகிவிடும். அதனால் குழந்தைகள் பொறுமையை இழந்து, அடிக்கடி பதற்றமாகிவிடுவார்கள். நிதானமாக சிந்திக்கவும், செயல்படவும் முடியாமல் தடுமாறுவார்கள். கோபம், ஆத்திரம் எல்லாம் அதிகரிக்கும். தொடர்ந்து செல்போன் பயன்படுத்தினால் குழந்தைகளின் கேள்வித்திறனும் பாதிக்கும். இப்போதெல்லாம் சிறுவர், சிறுமியர்கள்கூட மனஅழுத்தத்திற்கு உள்ளாகுகிறார்கள். அதற்கும், செல்போன் கதிர்வீச்சுகளுக்கும் தொடர்பு இருக்கிறது.

செல்போன் ஒரு தகவல் தொடர்பு சாதனம். குழந்தைகள் கையில் வைத்து விளையாடும் பொம்மை அல்ல அது. குழந்தைகள் அதை ஒரு விளையாட்டு பொருள்போல் நினைத்து பயன்படுத்துவது தவறான பழக்கம்.

செல்போன் குழந்தைகளின் அறிவை பெருக்கும் கருவி அல்ல. அதை வைத்துக்கொண்டு குழந்தைகள் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள முடியாது. செல்போனை நன்றாக பயன்படுத்த தெரிந்த குழந்தைகள் எதிர்காலத்தில் புத்திசாலிகளாகிவிடுவார்கள் என்பதற்கும் எந்த உத்திரவாதமும் இல்லை.

எப்போதும் தலைகவிழ்ந்து செல்போனையே பயன்படுத்திக்கொண்டிருக்கும் குழந்தைகள் வீடு, உறவு, உலகத்தை மறந்துவிடுகிறார்கள். வேறு எதுவும் முக்கியம் இல்லை செல்போனே தங்கள் உலகம் என்று முடிவு செய்து விடுகிறார்கள். அம்மா, அப்பாவை நிமிர்ந்து பார்த்து பேசுவதற்குகூட நேரமில்லாமல் செல்போனுக்குள் ஐக்கியமாகிவிடுறார்கள். இந்த சமூகத்திற்கும், தங்களுக்கும் சம்பந்தமே இல்லாததுபோல விலகி வாழ்பவர்களாக மாறிவிடுகிறார்கள்.

குழந்தைகள் சக மனிதர் களோடு பழகி, உறவாடி தங்கள் அனுபவங்களை வளர்த்துக்கொள்ளவேண்டும். அதுதான் அவர்களுக்கு மனோவளர்ச்சியை கொடுக்கும். செல்போனே உலகம் என்ற நிலையை அவர்கள் அடைந்துவிடும்போது, அவர்களுக்கு உலக அனுபவம் கிடைக்காது. அவர்களது மனோவளர்ச்சியும் பாதிக்கப்படும். பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் செல்போன் ஆர்வத்தை பெருமையோடு பேசிக்கொள்கிறார்கள். அவர்கள் மிக முக்கியமான விஷயத்தை கவனத்தில்கொள்ள மறந்து விடுகிறார் கள். அதாவது செல்போனில் இருந்து பெறப்படும் அறிவு ஒரு குறுகிய எல்லையைகொண்டது. அதையும் தாண்டிய அறிவை அவர்கள் வளர்த்துக்கொண்டால்தான், இந்த சமூகத்தோடு ஒன்றிணைந்து வாழ முடியும்.

செல்போனில் முடங்கும் பெரும்பாலான குழந்தைகளுக்கு ஓடி, ஆடி விளையாட விருப்பம் இல்லை. அதனால் அவர்களது உடல்வளர்ச்சியோடு சேர்ந்து மனவளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு, தகவல்களை தருகிறது அந்த ஆய்வு அறிக்கை. இதை எல்லாம் பெற்றோர்கள் கவனத்தில்கொள்ளவேண்டும். நம் நாட்டில் மட்டுமல்ல, எல்லா நாடுகளிலுமே குழந்தைகள் செல்போன்களை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. 

இங்கிலாந்தில் நடந்த ஒரு ஆய்வில், ‘12 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 80 சதவீதம் பேர் செல்போனுக்கு அடிமையாகி இருப்பதும், 14 வயதுக்குட்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் செல்போனை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதும்தெரியவந்துள்ளது. பல மணி நேரம் ஒரே இடத்தில் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்தபடி செல்போன், டேப்லட் போன்றவற்றில் வீடியோக்கள் பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றால் முதுகு எலும்பு மற்றும் தசைகள் பாதிப்படைகின்றன. மேலும் கண்கள், மனம், தூக்கம் என எல்லாவற்றையும் கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் குழந்தைகள் இழக்கத் தொடங்குகிறார்கள். கடைசியில் உடல் பருமன் என்ற பாதிப்பில் சிக்கிக்கொள்கின்றன.

சும்மா உட்கார்ந்தபடி தொடுதிரையை விரல்களால் தேய்த்துக் கொண்டிருக்கும் பழக்கம் விரல்களுக்கோ கைகளுக்கோ போதுமான பயிற்சியை தருவதில்லை. இயல்பாக குழந்தைகளின் விரல்கள் மற்றும் கைகள் அந்த வயதில் பெறவேண்டிய ஆற்றலைப் பெறுவதில்லை. அதனால் அவை திடமான வளர்ச்சி அடைவதில்லை. இப்படியே பழகும் குழந்தைகள் அதன்பின் பள்ளிகளில் சேரும்போது பிரச்சினை முளைக்கத் தொடங்குகிறது. அவர்கள் இரண்டு, மூன்று மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து தேர்வு எழுத முடியாமல் திணறிப் போகிறார்கள். கைகள் எழுத ஒத்துழைப்பதில்லை.

மேலும், குழந்தைகள் வீட்டுக்குள்ளே அடங்கிக் கிடப்பதால், வெயிலில் அலைந்து உடல் பெறும் அவசியமான வைட்டமின்கள் எதுவுமே அவர்களுக்கு கிடைப்பதில்லை. அதோடு உடலை வருத்தி எந்த விளையாட்டிலும் ஈடுபடாததால் உடல் பருமன் ஏற்படுகிறது. இது பிறகு சர்க்கரை நோயிலும் உயர் ரத்த அழுத்தத்திலும் கொண்டு வந்து விட்டு விடுகிறது.

ஒளிரும் திரையை பல மணி நேரம் பார்ப்பதால், கண்களும் பாதிப்புக்கு ஆளாகின்றன. கண்கள் சிவக்கின்றன. விழிகள் உலர்ந்து போய் பார்வைத்திறன் பாதிக்கப்படுகிறது. மிக இளம் வயதிலேயே கிட்டப்பார்வை குறைபாடு ஏற்பட்டு விடுகிறது. பொதுவாக பெற்றோர்களும் மற்றோர்களும் பேசிப்பேசித்தான் குழந்தைகளின் பேச்சுத்திறனும் மூளைத்திறனும் வளர்ச்சி பெறும். இந்த வளர்ச்சியை மொபைல் போன்ற பொருட்களின் திரைகளில் தோன்றும் மாயக்காட்சிகள் குழந்தைகளை வெறும் பார்வையாளர் என்ற நிலைக்கு அடிமை ஆக்கிவிடுகின்றன.

எதிர்கால தலைமுறை நலன் கருதி வெளியிடுவோர்,

அதிரை பிறை