Adirai pirai
Dr.Pirai

பச்சிளம் குழந்தைகளுக்கு மாட்டுப்பால்… தாய்மார்களே எச்சரிக்கை!

ஒரு வயது முடியும் வரை குழந்தைகளுக்கு மாட்டுப்பால் அறவே கொடுக்காதீர்கள். என் பையன் பிறந்து 35 நாள் ஆகிறது. பிறந்த சிறு நாளிலிருந்து தாய்ப்பால் அவனுக்கு போதாமையால் பவுடர் பால் கலந்து அவன் பசி தாங்க முடியாமல் அதிகமாக அழும் போது மட்டும் கொடுத்து வந்தோம்.

அதற்கு பிறகு எங்கள் வீட்டில் பெரியவர்கள், சொந்தங்கள் மாட்டுப்பால் ரொம்ப நல்லது அதை கொடுங்கள் பவுடர் பாலை விட மாட்டுபால் ரொம்ப நல்லது. தாய்ப்பாலுக்கு இணையானது. ஒரு மாட்டிலிருந்து கறக்கும் பாலை மட்டும் கொடுங்கள் என்றார்கள்.

ஒரு நாளுக்கு ஒரு முறையாவது அவனுக்கு மாட்டுப்பால் கொடுத்து வந்தோம். அன்றிலிருந்து உடம்புக்கு முடியாமல் போனது. சளி, இருமல், உமட்டல் என இரவெல்லாம் தூங்க முடியாமல் தவித்தான்.

தொடக்கத்தில் ஒரு டாக்டரிடம் காண்பித்து 5 நாள் மருந்து கொடுத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. அதற்கடுத்து என் நெருங்கிய நண்பர் ஒருவரது அறிவுறுத்தலின் பெயரில் ஒரு குழந்தை மருத்துவரை சென்று பார்த்தோம். அவர் ஒருவரை பார்த்து அனுப்புவதற்கே அரை மணிநேரம் ஆகும் என சொன்னார்கள். சிறிய கன்சல்டிங் ஹால் தான். அரசு மருத்துவர் பகுதி நேரமாக சிகிச்சை அளிக்கிறார்.

அவரிடம் குழந்தையை காண்பித்ததும் தாய்ப்பால் தவிர வேறேதும் குழந்தைக்கு கொடுத்தீர்களா என்று கேட்டார். கொஞ்சம் தயக்கத்துடன், பத்தாமல் இருக்கும் போது மட்டும் ஆரம்பத்தில் பவுடர் பால் கொடுத்தோம். அதன் பிறகு மாட்டுப்பால் கொடுத்தோம் என்றோம்.

மாட்டுப்பால் குழந்தைக்கு எவ்வளவு கேடானது என சொல்ல ஆரம்பித்தார் மருத்துவர். இதனை அவர் வாய்மொழியாக சொல்லிருந்தால் கூட நாம் நம்பிருக்க முடியாது. ஆனால் அவர் சொல்லும் போதெல்லாம் பெரிய மருத்துவர்கள் எழுதிய புத்தகங்களை எடுத்து அவர்கள் ஆராய்ந்து எழுதியிருப்பதையும் மேற்கொள் காட்டி நம் கண் முன்னே எடுத்து காட்டுகிறார். குழந்தை வளர்ப்பில் உள்ள மூடநம்பிக்கைகளில் இதுவும் ஒன்று என்கிறார் அவர்.

தாய்ப்பாலை விட மாட்டுப்பால் மூன்று மடங்கிற்கு மேல் அடர்த்தி கொண்டது. அதே போல் தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்தும் மாட்டுப்பாலில் உள்ள புரதச்சத்தும் முற்றிலும் வேறானது. மாட்டுப்பாலை செரிமானம் செய்யும் அளவுக்கு குழந்தைகளுக்கு சக்து இருக்காது, அதனால் பல மாற்றங்கள் குழந்தைகளுக்கு ஏற்படலாம். வயிற்றுப்போக்கு, இருமல், இயல்பான தினசரி நடவடிக்கைகளில் மாற்றம், 1 வயதுக்கு பிறகும் கூட இதன் தாக்கம் இருக்கும் என்றார்.

பேசி முடிக்கும் போது, எப்பவுமே குழந்தைக்கு மாட்டுப்பால் கொடுக்கிறதில்ல பசி போதாமைக்கு தான் கொடுக்கிறோம்னு எங்கள நியாயப்படுத்திக்க சொல்ல, எல்லாம் நல்லதா கொடுத்திட்டு கொஞ்சமா மூட்டைபூச்சி மருந்த நம்ம குழந்தைக்கு கொடுப்போமா அதுபோலத்தான் என்றார். இனி யாரும் 1 வயதுக்கு குறைவாக உள்ள குழந்தைக்கு மாட்டுப்பாலை கொடுக்காதீர்கள், பரிந்துரைக்கவும் செய்யாதீர்கள்.

-அபூ சித்திக்