Adirai pirai
articles உள்ளூர் செய்திகள்

அதிராம்பட்டினத்தின் பெயர் “குப்பைத்தொட்டினம்” என மாற்றம்

இந்த தலைப்பு உங்களுக்கு சற்று வித்தியாசமாக தோன்றலாம். எதுகை மோனைக்காக இந்த தலைப்பை நாம் எழுதவில்லை. எதார்தத்தை பதிவு செய்ய வேண்டும் என்பதால் இது போன்ற தலைப்பை பதிவிட்டுள்ளோம். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெயர் காரணம் இருக்கும். அந்த வகையில் நமதூருக்கு மிகச்சரியான பெயர் குப்பைத்தொட்டினம் என்பது தான். அந்த அளவுக்கு அதிராம்பட்டினத்தில் திரும்பும் திசையெல்லாம் குப்பைகள் நிரம்பிக்கிடக்கின்றன. குப்பைகள் சாலைகளில் சிதறிக்கிடப்பதை தடுக்க முஹல்லா அமைப்புகள், என்.ஜி.ஓக்கள் சார்பில் குப்பைத்தொட்டிகள் பல்வேறு வீதிகளில் வைக்கப்பட்டன. அந்த குப்பைத்தொட்டிகள் எல்லாம் நிரம்பி வழிந்துக்கிடக்கின்றன. ஆனால் அந்த குப்பைகளை அள்ளுவதற்கு இந்த கையாளாகாத பேரூராட்சிக்கு நேரமில்லை.

எந்த வீதியை கடந்து சென்றாலும் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு உள்ளது அதன் நிலை. தெருக்களின் பொழிவை கண்டு மக்கள் மூக்கில் விரல் வைக்கவில்லை, மாறாக அங்கு கிடக்கும் குப்பைகளிலிருந்து வெளிவரும் நாற்றத்திலிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் மூக்கில் விரல் வைத்து மூடிச்செல்கிறார்கள். “தயவு செய்து குப்பைகளை பேரூராட்சி அகற்றிடுமாறு அதிரை பிறை சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” என செய்தி வெளியிட்டு நமக்கே வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. செவிடன் காதில் சங்கூதிய கதையாக உள்ளது அதிரை பேரூராட்சியின் நிலை. உதாரணத்திற்கு கீழே இரண்டு பகுதிகளின் நிலையை புகைப்படங்களை வெளியிட்டுள்ளோம். சொல்ல முடியாது போட்டோவிலிருந்து கூட நாற்றம் வீசும் வாய்ப்புள்ளது.

இடம்: கடற்கரைத்தெரு

இடம்: மஸ்ஜிதுல் அக்ஸா அருகில் (நெசவுத்தெரு)