Adirai pirai
உலகம்

வெள்ளக்காடான குவைத்… குமுறும் மக்கள்!

அரபு நாடுகளுள் ஒன்றான குவைத்தில் பெய்த கனமழையால் நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. இயல்பை விட மூன்று மடங்கு அதிகமான மழை பெய்ததால், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ள சேதங்களுக்கு பொறுப்பேற்று பொதுப்பணி துறை அமைச்சர் ஹுசாம் அல் ரோமி பதவி விலகியுள்ளார்.

பெரும்பாலான பகுதிகளில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நீரில் மூழ்கி தத்தளித்ததைக் காண முடிந்தது. சாக்கடைகள் அடைத்துக் கொண்டு சாக்கடை நீரும் மழை நீருடன் கலந்து மக்களை அவஸ்தைக்குள்ளாக்கி விட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில், மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளை குவைத் அரசு தீவிரப்படுத்தி உள்ளது. பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தில் மிதப்பதால் சமுதாய நல மையங்கள் உள்ளிட்டவற்றில் மக்கள் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். மக்கள் வீடுகளை விட்டு வர வேண்டாம் என்று குவைத் உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. மீட்புப் பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புப் படையினரும் களம் இறங்கியுள்ளனர்.

அவசரகால உதவிக்கு: 112 என்ற எண்ணை அழையுங்கள்