Adirai pirai
INFORMATION தமிழகம்

வியாபாரிகளுக்கு எச்சரிக்கை… தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் நடவடிக்கை

‘தமிழக கடைகள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் உள்ளதா’ என, ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப அலுவலர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு கடைகள், ஓட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் இருக்க வேண்டும். மேலும் 5:3:2 விகிதாச்சார அடிப்படையில் தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் பெயர் இடம் பெற வேண்டும். இவை அனைத்தும் ஒரே பெயர் பலகையில் இருக்க வேண்டும்.

ஆனால், பல நிறுவன பெயர் பலகைகள் ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் எழுதப்படுகின்றன. அந்நிறுவனங்களிடம் ரூ.50 மட்டுமே அபராதமாக வசூலிக்கப்படுகிறது. அதனால் பலரும் தமிழில் பெயர் பலகை வைக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே, தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனரகம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதில், ‘தமிழ் வளர்ச்சித்துறை அலுவலர்கள் மாதந்தோறும் அரசு அலுவலகங்கள் மற்றும் 100 கடைகள், வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப வேண்டும். தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களின் விபரம் தொழிலாளர் துறை ஆணையருக்கு அனுப்பப்படும். அவர்கள் மூலம் வழக்கு பதிவு செய்யப்படும், என உத்தரவிடப் பட்டுள்ளது.