Adirai pirai
Design உள்ளூர் செய்திகள்

அதிரையை கதிகலங்க வைத்த கஜா புயல் (கள நிலவரம் மற்றும் படங்கள்)

கஜா புயல் தஞ்சை மாவட்டம் அதிராமபட்டினம் அருகே முழுவதுமாக கரையை கடந்துள்ளது. நாகையில் 100 கி.மீ., ம் காரைக்காலில் 92 கி.மீ., வேகத்தில் காற்று வீசியது. தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அதிகபட்சமாக 111 கி.மீ., வேகத்தில் காற்று வீசி உள்ளது. அதிகபட்சமாக அதிராம்பட்டினத்தில் 16 செ.மீ., மழைபெய்துள்ளது. பட்டுக்கோட்டை, பேராவூரணி, கடலூரில் 14 செ.மீ., மழை பெய்துள்ளது. நாகையில் 6 செ.மீ., புதுச்சேரி மற்றும் கடலூரில் 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.கஜா புயலால் நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் அதிக அளவு சேதம் ஏற்பட்டுள்ளது.

அதிரையில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. வீட்டின் கூரைகள், அஸ்பர் ஷீட்கள் , சன்சைட்டுகள் உடைந்து விழுந்தன. மின் கம்பங்கள் முறிந்து விழுந்துள்ளதால் மின்சாரம் முழுவதுமாக தடைப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பிலால் நகர் பகுதியில் முழுவதுமாக தண்ணீர் சூழ்ந்துள்ளது. அப்பகுதி மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். முறிந்து விழுந்த மரங்களை இளைஞர்கள், தன்னார்வலர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர். சேதங்கள் பல கோடிக்கணக்கில் இருக்கும் என அஞ்சப்படுகிறது.