Adirai pirai
Gaza relief உள்ளூர் செய்திகள்

அதிரையில் சாலை மறியல் போராட்டத்தில் குதித்த கடற்கரைத்தெரு மக்கள்!

வங்கக் கடலில் உருவான கஜா புயல் கடந்த 16 ம் தேதி அதிகாலை முழுவதுமாக கரையைக் கடந்தது. அப்போது அதிக பட்சமாக தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் 111 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் ஒட்டுமொத்த அதிராம்பட்டினமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் முழுவதும் மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் வேறோடு சாய்ந்துள்ளன. பொதுமக்கள் வீடுகளை இழந்துள்ளனர். மின் இணைப்புகள், தொலைத்தொடர்புகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனை செல்லும் பாதையில் விழுந்து கிடக்கும் மரங்கள் அகற்றப்படாததால் பொதுமக்கள் மருத்துவமனைக்கு கூட செல்ல முடியவில்லை. கடலோர பகுதிகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.

அதிராம்பட்டினம் பகுதி முழுவதுமாக பாதிக்கப்பட்டு, வெளியே செல்ல வழியின்றி தவித்து வரும் தங்களுக்கு, இதுவரை எந்தவித அரசு நிவாரண உதவிகளும் வந்து சேரவில்லை என அப்பகுதி மக்கள் கவலைதெரிவித்துள்ளனர். புயல் பாதித்த மற்ற பகுதிகளுக்கு நேரில் செல்லும் அரசு அதிகாரிகள், அதிராம்பட்டினம் பகுதியை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். உணவு, பால், தண்ணீர், மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தற்போதைய தேவையாக உள்ளது என்றும், தன்னார்வ அமைப்புகளும், அரசும், மாவட்ட நிர்வாகமும் அதிராம்பட்டினத்திற்கு முன்னுரிமை அளித்து உதவ நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் அடிப்படை உதவிகளை கூட செய்துத்தராத அரசு மற்றும் அதிகாரிகளை கண்டித்து அதிரை ஈ.சி.ஆர் சாலையை கடற்கரைத்தெரு வாசிகள் மறியல் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் நடைபெற்ற போராட்டத்தை போலீசார் கலைக்க முயன்றும் பயனில்லாததால், அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.