Adirai pirai
articles உள்ளூர் செய்திகள்

அதிரை விவசாயிகளே… கஜா புயலில் விழுந்த தென்னை மரங்களை மீண்டும் வளர்க்க முடியுமா?

கஜா புயலின் தாக்கத்தால் தமிழகத்தின் டெல்டா மாவட்டப் பகுதிகள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. வயல்வெளிகள், காடுகள், தோப்புகள், சாலையோர மரங்கள் முறிந்தும், வேரோடு சாய்ந்தும் கிடக்கும் காட்சிகள் மனதை உருக்குகின்றது.

கஜா புயலில் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் கொத்துக் கொத்தாய் சாய்ந்து கிடக்கும் படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. நீண்டகால வளர்ப்பு வீணாகிப் போய்விட்டது என்ற கவலை அனைவரிடத்திலும் உள்ளது.

விவசாயிகள் தங்களின் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தால் அதனை மீண்டும் வளர வைக்க வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு இத்தகைய செய்தியானது இன்றைய நிலையில் மிகவும் பயனுள்ள தகவலாகும்.

என்ன செய்ய வேண்டும் ?

புயலில் வேருடன் விழுந்த தென்னை மரங்களுக்கு மீண்டும் வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

விழுந்த தென்னையில் உள்ள காய்ந்த கிளைகள், இளநீர்க் காய்கள் மற்றும் காய்ந்த பிறவற்றை நீக்க வேண்டும். இது நீராவிப் போக்கைக் குறைக்கும். இது மரத்தை ஈரப்பதத்துடன் வைத்து இருக்கும்.

தென்னைக்கான குழியை 3 அடி ஆழத்திற்கு தோண்டி மரத்தை நட்டு விட்டு அதில் காப்பர் ஆக்சி குளோரைடை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் என கலந்து ஊற்ற வேண்டும். இது பூஞ்சை தாக்குதலை தடுக்கும். இதன் பின் soil pro actor coconut mix-ஐ பயன்படுத்த வேண்டும். மரத்தை தூக்கி நிறுத்திவிட்டு அதனை சுற்றி நாற்புறமும் கம்புகள் வைத்து கட்ட வேண்டும்.

மரத்தில் சாறு வடிதல் நோயின் காரணமாக ஏற்படும் அழுகிய பகுதியின் மேலே துணியினை சுற்றி IBA ஹார்மோன் 500பிபிஎம் தெளிப்பது அல்லது தடவுவதன் மூலம் புது வேர்களைக் உண்டாக்கலாம். அழுகியப் பகுதியை வெட்டி வேர் வந்த பகுதியினை தரையில் நட முடியும் என்றும் கூறப்படுகிறது. அழுகும் நிலையில் உள்ள மரத்தில் மட்டைகணுவிலிருந்து இருந்து 4 அடி கீழே சிறிதாக கொத்தி விட வேண்டும். இதற்கு காற்றோட்டமான பகுதியில் இருத்தல் அவசியம்.

விழுந்த தென்னை மரங்களில் வேரோடு சாய்ந்த மரங்கள் மட்டுமே மீண்டும் வளரக்கூடியவை. முறிந்த மரங்களுக்கு பொருந்தாது எனக் கூறுகின்றனர். இதனை பற்றி தேனி தோட்டக்கலை கல்லூரி உதவி பேராசிரியர் பாலகும்பகன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

சில மரங்களை மீட்கலாம் :

மேட்டுப்பாளையத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் இதற்கு முன்னர் அவர் அப்பகுதியில் காட்டு யானைகளால் சாய்க்கப்பட்ட தென்னை மரங்களை மீண்டும் வளர்த்து உள்ளதாக தெரிவித்தார்.

தென்னை மீட்பு பணிக்கு தமிழக அரசு உதவ முயன்றால் ஆயிரக்கணக்கான தென்னை மரங்களை இழந்தாலும் நூற்றுக்கணக்கான மரங்களையாவது மீட்டெடுக்க முடியும்.

டெல்டா பகுதி மீண்டும் பசுமையுடன் எழும் வாய்ப்புள்ளது.