Adirai pirai
Gaza relief

அதிரையில் PFI தேசிய பொதுச்செயலாளர் முஹம்மது அலி ஜின்னா ஆய்வு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை தெற்கு மாவட்டத்தில் அதிராம்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் எம்.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் நேற்று (26.11.2018)நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு மக்களை சந்தித்து புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை கேட்டறிந்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது பேசிய அவர், கஜா புயலின் பாதிப்புகளை நேரடியாக சென்று ஆய்வு செய்த பொழுது மிகப்பெரிய ஒரு அழிவை கஜா புயல் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தலைமுறையினுடைய வாழ்வாதாரமே அழிந்து நாசமாகி இருக்கின்றது. தென்னை விவசாயிகள், மீனவ சமூகங்கள், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை இழந்தவர்களின் நிலையை பார்க்கும் பொழுது உள்ளத்தையே ரணமாக்கி விடுகிறது. இவ்வளவு பெரிய பேரழிவு நடந்த போதும் கூட பிரதமர் மோடி இந்த துயரத்தில் பங்கு கொள்ளும் வகையில் ஒரு இரங்கலையோ, ஒரு ஆறுதலையோ கூட தெரிவிக்கவில்லை என்பது கொடுமையிலும் கொடுமையான ஒரு விஷயம்.

இதுவரை நேரடியாக வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடவும் இல்லை மக்களை சந்திக்கவும் இல்லை. அதேபோன்று, இந்த பேரழிவின் நிவாரண நிதியாக ஒரு பைசாவைகூட மத்திய அரசு இதுவரை ஒதுக்கீடு செய்யவில்லை. ஏன் ஒதுக்கீடு செய்யவில்லை என்று கேட்டால் ஆய்வறிக்கை வரவேண்டும் என்று விளக்கம் சொல்கிறார்கள்.

ஆனால், கடந்த 2017 ஜூலை மாதம் குஜராத்தில் இரண்டு மாவட்டங்களில் மட்டுமே பாதித்த வெள்ளப்பெருக்கிற்கு உடனடியாக 500 கோடியை மத்திய அரசு வழங்கி உதவியது. மோடி அவர்களும் நேரில் சென்று பார்வையிட்டார். எனவே, தமிழக மக்களுடைய விஷயத்தில் ஒரு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு நடந்து கொள்வதாகவே தோன்றுகின்றது. எனவே, மத்திய அரசின் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மையை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கின்றது.

மத்திய அரசு, தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ள 15,000 கோடி நிதி ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். அதேபோன்று புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தேசிய பேரிடராக உடனடியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். மேலும், மாநில அரசு பாதிப்புகளுக்குண்டான இழப்பீடுகளை வழங்குவதாக கூறி இருக்கின்றது. தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீடுகளை போர்க்கால அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றேன். அதேபோன்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள இழப்பீடுகள் போதுமானதாக இல்லை என்ற ஒரு மனக்குறை பரவலாகவே இருக்கின்றது. எனவே, பாதிக்கப்பட்ட மக்களின் மனக்குறையை அறிந்து உரிய இழப்பீட்டை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றேன். இவ்வளவு பெரிய அளவிலான பேரழிவுகள் நிகழ்ந்த போதும் தேசிய அளவிலான ஊடகங்கள் இதில் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை. எனவே, தேசிய அளவிலான ஊடகங்கள் இதனை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும், மத்திய அரசை நிர்பந்திக்கும்படியான செய்திகளை உடனே வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக துவக்கம் முதலே சுமார் 1000 மீட்பு மற்றும் நிவாரணப் பணி செய்யும் பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் தன்னலமற்ற சேவையை பாதிக்கப்பட்ட பகுதிகளில் செய்து வருகின்றார்கள். பாப்புலர் ஃப்ரண்ட் தமிழ் மாநிலம் சார்பாக இதுவரை ரூபாய் 90 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள பொருள்கள் நிவாரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இப்பொழுது பாப்புலர் ஃப்ரண்ட்-ன் தேசிய தலைமையின் சார்பில் உடனடி நிதியாக சுமார் 20 லட்சத்தை தேசிய தலைமை ஒதுக்கீடு செய்திருக்கின்றது. இன்னும் விரிவான பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செய்யும் என்று தமிழக மக்களுக்கு தெரிவித்துக்கொள்கின்றேன். பாதிக்கப்பட்ட மக்களின் துயரங்களோடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பங்கு கொள்கின்றது, உயிரழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றது. இழப்புகளை சந்தித்த மக்கள் நம்பிக்கையோடு புதிய வாழ்க்கையை துவங்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள் விடுக்கின்றது.

மேலும், இந்நிகழ்வின்போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது நஸ்ருதீன், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஹாஜா அலாவுதீன் மற்றும் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநிலத் தலைவர் ஆபிருதீன் மன்பயி, எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர் இல்யாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.