Adirai pirai
islam இந்தியா

பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் பதற்றத்தை உருவாக்கும் சங்பரிவாருக்கு TNTJ கடும் கண்டனம்

பாபர் மஸ்ஜித் தொடர்பான வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பள்ளிவாசல் நிலத்தில் ராமர் கோயில் கட்டக் கோரி விஸ்வ இந்து பரிஷத் மற்றும் சிவசேனா அமைப்பினர் அயோத்தியில் ஊர்வலம் நடத்தி வருகின்றனர். பெருமளவில் மக்கள் கூட்டத்தைக் கூட்டி உ.பி. மட்டுமல்லாது இந்தியா முழுவதும் கலவரத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் சட்டத்தையும் நீதிமன்றத்தையும் மதிக்காத சங்பரிவார்களின் இந்தச் செயலுக்கு தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் கடும் கணடனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றது.

சட்ட விரோதமான இந்த ஊர்வலத்திற்குத் தடை விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய உ.பி.யின் யோகி அரசோ இதற்கு முழுமையான ஆதரவைத் தெரிவித்து கலவரத்தைத் தூண்டி வருகின்றது. நீதிமன்ற உத்தரவுகளைக் கேலிக்குள்ளாக்கும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய மத்திய அரசோ இந்த வெறியாட்டத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு பல்வேறு துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இதிலிருந்து மக்களைத் திசைதிருப்புவதற்காக பாபரி மஸ்ஜித் விவாகாரத்தைக் கையில் எடுத்து, வகுப்புக் கலவரத்தைத் தூண்டி அதன் மூலம் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கின்றது என்பதைத் தான் சங் பரிவார்களின் இந்த ஊர்வலம் எடுத்துக் காட்டுகின்றது.

பாபரி மஸ்ஜிதை இடிப்பதற்காக எப்படி கரசேவை என்ற பெயரில் ரத்த வெறியாட்டம் நடத்தினார்களோ அதே பாணியில் தற்போது ராமர் கோயில் கட்டுவோம் என்று கூறி மீண்டும் ஊர்வலம் நடத்தத் தொடங்கியுள்ளனர். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் தோல்வியை எதிர்நோக்கியிருக்கும் பாஜக, மதவெறியைத் தூண்டி விட்டு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கத் திட்டமிட்டுள்ளதன் அடையாளமே இதுபோன்ற சம்பவங்கள் என்பதை நாடு முழுவதும் உள்ள மதச்சார்பற்ற சிந்தனையாளர்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.

சங் பரிவாரங்கள் சட்டத்தைக் கையில் எடுத்தால் அதே பாணியில் இஸ்லாமிய சமுதாயமும் களமிறங்கி, பாபரி மஸ்ஜித் நிலத்தைப் பாதுகாக்க எந்த விலையும் கொடுக்கத் தயங்காது. சுதந்தரப் போராட்டத்தில் இரத்தம் சிந்திப் போராடி, நாட்டிற்கு சுதந்தரத்தைப் பெற்று தந்த முஸ்லிம் சமுதாயம், பாப்ரி மஸ்ஜித் உரிமை மீட்புக்கு அதே துணிச்சலுடன் மீண்டும் ஒரு சுதந்திரப் போரை சந்திக்கத் தயங்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நாடு முழுவதுமு வன்முறையைத் தூண்டத் திட்டமிட்டுள்ள ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் சிவசேனா அமைப்புகளின் இந்தச் செயலுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதுடன் சட்டத்தை மதிக்காத இந்த அமைப்புகளைத் தடை செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

இப்படிக்கு,
இ. முஹம்மது
மாநில பொதுச் செயலாளர்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்