Adirai pirai
posts உள்ளூர் செய்திகள்

புயலடித்தும் திருந்தாத குப்பைத்தொட்டினம் பேரூராட்சி!

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பெயர் காரணம் இருக்கும். அந்த வகையில் நமதூருக்கு மிகச்சரியான பெயர் குப்பைத்தொட்டினம் என்பது தான். அந்த அளவுக்கு அதிராம்பட்டினத்தில் திரும்பும் திசையெல்லாம் குப்பைகள் நிரம்பிக்கிடக்கின்றன. குப்பைகள் சாலைகளில் சிதறிக்கிடப்பதை தடுக்க முஹல்லா அமைப்புகள், என்.ஜி.ஓக்கள் சார்பில் குப்பைத்தொட்டிகள் பல்வேறு வீதிகளில் வைக்கப்பட்டன. அந்த குப்பைத்தொட்டிகள் எல்லாம் நிரம்பி வழிந்துக்கிடக்கின்றன. ஆனால் அந்த குப்பைகளை அள்ளுவதற்கு இந்த கையாளாகாத பேரூராட்சிக்கு நேரமில்லை.

எந்த வீதியை கடந்து சென்றாலும் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு உள்ளது அதன் நிலை. தெருக்களின் பொழிவை கண்டு மக்கள் மூக்கில் விரல் வைக்கவில்லை, மாறாக அங்கு கிடக்கும் குப்பைகளிலிருந்து வெளிவரும் நாற்றத்திலிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் மூக்கில் விரல் வைத்து மூடிச்செல்கிறார்கள். “தயவு செய்து குப்பைகளை பேரூராட்சி அகற்றிடுமாறு அதிரை பிறை சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” என செய்தி வெளியிட்டு நமக்கே வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. செவிடன் காதில் சங்கூதிய கதையாக உள்ளது அதிரை பேரூராட்சியின் நிலை.

இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன் அதிரையை பந்தாடிய கஜாபுயல் பாதிப்பில் இருந்து இன்னும் மக்கள் மீண்டு வரவில்லை. இதற்காக அதிகம் உழைத்தவர்கள் பொதுமக்களும், தன்னார்வலர்களும், அமைப்புகளும் தான். அரசு அதிகாரிகளுக்கு இதில் பெரிய பங்கு இல்லை என்றே சொல்ல வேண்டும். வெளியூர்களில் இருந்து அதிரை வந்த மின்வாரிய ஊழியர்கள் செய்த உழைப்பை கூட உள்ளூரில் உள்ள ஊழியர்கள் செய்யவில்லை என்றே சொல்ல வேண்டும். முறிந்து விழுந்த மரங்களை வெட்டி அகற்றி, குப்பைகளை அகற்றிய பொதுமக்களே தொடர்ந்து அனைத்தையும் செய்துவிடுவார்கள் என அதிரை பேரூராட்சி ஒதுங்கிக்கொண்டதா என தெரியவில்லை. காரணம், புயல் ஓய்ந்து 15 நாட்களாகியும் வீதிகளில் தேங்கிய குப்பைகளை கூட அகற்ற முடியாத நிலையில் தான் உள்ளது குப்பைத்யொட்டினம் பேரூராட்சி.

இயற்கை சீற்றத்துக்கு பின் அதிரையின் பல பகுதிகளில் மரங்களும், குப்பைகளும் அகற்றப்படாமல் தேங்கிடப்பதால் துர் வாடை வீச ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் தொற்று நோய் பரவி விடுமோ என்ற அச்சம் பொது மக்களிடையே எழுந்துள்ளது. குறிப்பாக குழந்தைகளை தொற்று நோய்கள் தாக்கக்கூடும் என்பதால் போர்க்கால அடிப்படையில் குப்பைகளை பேரூராட்சி அப்புரபடுத்தவேண்டும்.