Adirai pirai
articles உள்ளூர் செய்திகள்

யார எதிரியா நினைச்சோமோ அவங்கதான் காப்பாத்துராங்க – முத்துப்பேட்டை மக்கள் நெகிழ்ச்சி

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 29 ஊராட்சிகளும் 1 பேரூராட்சியும், பேரூராட்சியில் 24 வார்டுகளும் உள்ளன. சுமார் 1.5 லட்சம் மக்களை உள்ளடக்கிய இப்பகுதி தற்போது முற்றிலுமாக முடங்கிப்போயுள்ளது. இந்து, முஸ்லீம் மக்களின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இம்மண் இந்த சகோதரத்துவ உணர்வால் மட்டுமே மக்களின் உயிரை மட்டும் பாதுகாத்து வைத்துள்ளது.

தென்னைமரங்களும், மின்சாரமும் தற்போது முற்றிலுமாக இங்கே இல்லை. கடந்த 15 ஆம் தேதி நள்ளிரவு தொடங்கி மறு நாள் அதிகாலை வரை கோரத்தாண்டவம் ஆடிய கஜா புயல் இப்பகுதியை முற்றிலுமாக துடைத்தெறிந்துவிட்டுபோய் விட்டது. ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் அடியோடு சாய்க்கப்பட்டும், ஊர்முற்றிலும் துடைக்கபட்டு சமவெளியாகவும், ஆயிரக்கணக்கான வாழை, பலா, மல்லிகை, தேக்கு, மாமரங்கள் அழிந்தும் காணப்படும் காட்சி கல் நெஞ்சை கரைய வைக்கும்.

முத்துபேட்டை பகுதி முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு அரசால் கைவிடப்பட்டதாக அடுத்தடுத்து வந்த தகவல்களின் அடிப்படையில் தீக்கதிர் நாளிதழ் சார்பாக ஒரு செய்தியாளர் குழுவுடன் முத்துபேட்டை பகுதிக்கு சென்றோம். அங்கு சென்ற பிறகு கண்ட காட்சிகள் இலங்கை முள்ளிவாய்க்காலையும், பஞ்சம், பட்டினியால் பரிதவிக்கும் சோமாலியா நாட்டையும் நம் கண்முண்ணே கொண்டுவந்ததை தவிர்க்க முடியவில்லை. இது மிகைபடுத்துதல் அல்ல. முற்றிலும் உண்மை.

‘நீங்களாவது வந்தீங்களே..!’
முத்துப்பேட்டை பேரூராட்சி 10ஆவது வார்டுக்குட்பட்ட தெப்பத்தான் வெளி என்ற கடற்கரையோர பகுதிக்கு சென்றோம். “வாங்க சார் நீங்களாவது வந்தீங்களே, எங்க சோகத்தை அரசிடம் சொல்லுங்கள்” என்று வயதான பெண்மணி கையெடுத்து கும்பிட்டு கேட்டுகொண்டது, நமக்கே ஒரு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தியது. இப்பகுதி வழியாகத்தான் பிரபலமான அலையாத்தி காடுகள் நிறைந்த லகூன் பகுதிக்கு 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிக்கு திட்டமிடப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யபட்டும் இதற்கான பணி இன்னும் தொடங்கவில்லை என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

கஜா புயல் தாக்கிய நாள் தொட்டு இன்றைய நாள் வரை இந்த பகுதிக்கு அமைச்சரோ, சட்டமன்ற , நாடாளுமன்ற உறுப்பினர்களோ உயர் அதிகாரிகளோ, ஏன் மாவட்ட ஆட்சியரோ கூட வரவில்லை என குமுறுகிறார்கள் இப்பகுதி மக்கள். துர்க்கை அம்மாள் என்ற பெண்மணி கூறியது நினைத்து பார்க்க முடியாத கற்பனைக்கு எட்டாத ஒன்றாக இருந்தது. “தம்பி எங்க ஊருக்கு புயல் தான் வந்துச்சி. வேற யாரும் வல்ல; நாங்க எல்லாரும் உயிரோட எமலோகம் போயி பாத்துட்டு வந்துட்டோம்” என்பது தான் அது.

இன்னொன்றயும் அவர் சொன்னார்; “ நாங்க யார எதிரியா நினைச்சிகிட்டு இருந்தோமோ அவங்கதான் எங்க உயிர காப்பாத்திகிட்டு இருக்காங்க”! – அவர் கூறியது இஸ்லாமிய சகோதரர்களைத் தான்.இஸ்லாமிய சகோதரர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து பல இடங்களுக்கு, குறிப்பாக நிவாரணப் பொருட்கள் கிடைக்காத பகுதிக்கு சென்று சளைக்காமல் சேவையாற்றுவதை நம்மால் காணமுடிந்தது.

முத்துப்பேட்டை பகுதியில் உள்ள ‘விஷ ஜந்துக்கள்’ ஊட்டிவிட்ட மதவாத உணர்வுதான் இஸ்லாமியர்களை எதிரிகளாக இம்மக்களை நினைக்க வைத்துள்ளது என்பது மிகவும் கொடுமையான செய்தியாகும். மக்களை பிளவுபடுத்துவது தானே மதவெறிக் கூட்டத்தின் திட்டம். அது கஜா புயலால் தவிடுபொடி ஆகி இருக்கிறது. இப்பகுதி சிபிஎம் கிளை செயலாளர் கேஎஸ்.பாண்டியன், கீதா , கல்லூரி மாணவிகள் ரம்யா, பிரியா என எல்லோரும் ஒருமித்து சொன்னது நாங்கள் உயிர் வாழ வழி ஏற்படுத்துங்கள் என்பதுதான்.

முகாம் காலி
இன்னொரு அதிச்சியான தகவலை இப்பகுதிமக்கள் சொன்னார்கள். இனி முகாம் இல்லை என்று அரிசியை நிறுத்திவிட்டார்கள் என்ன செய்வதென்று தெரியவில்லை என்றார்கள். கல்லூரி மாணவர்கள் இந்த நேரத்தில் செமெஸ்டர் தேர்வு வைக்கிறார்கள் எங்களால் எப்படி தேர்வு எழுத முடியும் அதனை தள்ளி வைக்க வேண்டும்; மேலும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் அதிகாரத்திற்குட்பட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

தற்போது மன்னார்குடி கல்வி மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி, முத்துபேட்டை, கோட்டூர் ஆகிய ஊர்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்பதால் முகாமில் இருந்து வெளியேற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மக்களை வற்புறுத்துகிறது. ஆனால் மக்கள் முதல்வர் அறிவித்துள்ள இலவச தார்பாய் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கபெற்று ஓரளவிற்கு நிலைமை சீரடைந்தால் தான் வீட்டிற்கு செல்லமுடியும். எனவே அதுவரை மாற்று இடங்களை தேர்வு செய்து முகாம் அமைத்து தர வேண்டும் என்று கூறுகின்றனர்.

கருவாட்டுவாடி
முற்றிலும் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ள விசைப்படகு மீனவர்கள் “தனித்தீவாக” வசிக்கும் கருவாட்டுவாடிக்கு சென்றோம். அவர்களில் செ.பிலிப் , சி.ஆரோக்கியசாமி ஆகியோர் துயரத்தை கொட்டி தீர்த்தார்கள். 1987 ஆம் ஆண்டு முதல் 2018 ஆண்டும் வரை தொடர்ந்து நாங்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்து வருகிறோம். ஆனல் எதுவும் நடந்தபாடு இல்லை என்று கவலை தோய்ந்த முகத்துடன் தெரிவித்தனர். இந்த புயல் தாக்கத்தால் 30க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடந்துள்ளன. ஒரு படகின் மதிப்பு சுமார் 2 லட்சம் ரூபாய். தண்ணீர் புகுந்து வீணாகியுள்ள மோட்டார்களை சரி செய்வதற்கு தலா 65,000 ரூபாய் தேவைப்படுகிறது. ஒரு கிலோ மீன்பிடி வலை 1500 ரூபாயாக உள்ளது. எங்களின் இந்த நிலையை புரிந்து கொண்டு மத்திய மாநில அரசுகள் போதுமான அளவிற்கு நிவாரணம் வழங்கி எங்கள் குடும்பங்களை பாதுகாக்க வேண்டும் என்றும் இப்பகுதி மீனவர்கள் கேட்டுக் கொண்டனர்.

திக்கு முக்காடும் தில்லை விளாகம்
தில்லை விளாகம் என்றாலே அனைவரது நினைவிற்கும் வருவது உலகப் புகழ்பெற்ற “ ராமர் கோவில் தான்”. இந்த ஊர் கஜா புயலின் கோரத்தாண்டவத்தால் திக்குமுக்காடி திணறிபோயிருக்கிறது என்றால் மிகையல்ல. இந்த ஊராட்சியை பொறுத்தவரை வசிப்பவர்களில் 80 சதவிகித மக்கள் ஏழை எளிய தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களாவர். கீற்று முடைவது, மீன் வியாபாரம் செய்வது, சிறு சிறு தொழிகள் செய்வது அன்றாடம் கூலிவேலைக்கு செல்வது என்று உழைத்து பிழைப்பவர்களாக உள்ளனர்.

இந்த ஊரை சேர்ந்த கீழக்கரை தெற்கு பள்ளி மேடு போன்ற பகுதியின் மக்கள் தற்போது பிரதான கிழக்கு கடற்கரைச் சாலையில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். இதற்கு காரணம் இந்த வழியே செல்கிற பல்வேறு நிவாரண அமைப்புகளின் உதவிகளை பெறுவதற்காக வாகனத்தில் வருபவர்களும் மக்களின் நெருக்கடிக்கு பயந்து சாலையின் இருபுறமும் பொருட்களை வீசிச் செல்கிறார்கள். இந்த பொருட்களை எடுப்பதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் போட்டி போட்டுக் கொண்டு முண்டியடித்து செல்கிறார்கள். வயதானவர்கள், குறிப்பாக பெண்கள்,குழந்தைகள் சாலைகளில் விழுந்து அடிபடுகிறார்கள. இந்த காட்சியை நேரில் பார்த்தபோது மனம் பதறியது.

‘வடிகஞ்சி’ மட்டும்தான்
இந்த ஊராட்சியில் துறவரஞ்செட்டிக்காடு பகுதியில் உள்ள முகாமை பார்வையிட்ட போது அதன் அவலத்தை உணரமுடிந்தது. தாழ்த்தப்பட்ட விவசாய கூலிவேலை பார்க்கும் மக்கள் மிகுந்த துயரத்துடனும் நம்பிக்கை இல்லாமலும் எங்களை வரவேற்றனர். சுமார் 50 குழந்தைகள் இந்த முகாமில் இருந்தனர். தாய்ப் பால் குடிக்கும் நிலையில் இருக்கும் 25 குழந்தைகளுக்கு “ வடிகஞ்சி ” கொடுக்கிறோம் என்று தாய்மார்கள் கூறினர். வள்ளியம்மை, சரிதா, காளிதாஸ் ஆகியோர் தங்களின் கவலைகளை பகிர்ந்து கொண்டனர். தடுப்பூசி எதுவும் போடவில்லை. குடிக்க நல்ல தண்ணீர் இல்லை. புயல் அடித்த நாளில் இருந்து இன்றுவரை மின்சாரம் இல்லை. கொசுக்கடியால் அவதிப்படுகிறோம். டெங்கு, பன்றிக்காய்ச்சல் என்று உயிர்பறிக்கும் நோய்களை எண்ணி பயந்து கொண்டிருக்கிறோம். இதுவரை நிவாரண உதவிகள் எதுவும் கிடைக்கவில்லை. அதிகாரிகள் அனைவரும் சாலை மார்க்கமாகவே சென்று கொண்டிருக்கிறார்கள் என்றார்கள்.

உதயமார்த்தாண்டபுரம்
பறவைகள் சரணாலயம் உள்ள உதயமார்த்தாண்ட்புரத்தில் உள்ள ஏரிக்கரை நாடார் தெரு உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தோம். புயல் அவலத்தை பயன்படுத்தி கொண்டு வீடுகளில் திருட்டு நடப்பதாகவும் காவல்துறையில் புகார் அளித்தால் நடவடிக்கை இல்லை என்றும் அங்கிருந்த பெண்கள் தெரிவித்தனர். இங்குள்ள பள்ளியில் நிவாரண முகாம் உள்ளது. அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சமூக அக்கறையோடு தனது சொந்த பொறுப்பில் உதவி செய்து முகாமில் உள்ளவர்களுக்கு உணவளிப்பதாக தெரிவித்தனர். எல்லா இடத்திலும் கூறிய அதே புகார்கள் தான் இங்கேயும்.

15 நாட்களாக இருட்டு
மார்க்சிஸ்ட் கம்யூஸ்ட் கட்சியின் முத்துபேட்டை ஒன்றிய செயலாளர் கே.பாலசுப்பிரமணியன், நாள் முழுவதும் எங்களுடன் இணைந்து முத்துப்பேட்டை ஒன்றியத்தின் நிலைமைகளை துல்லியமாக எடுத்துவைத்தார். தேசிய நெடுஞ்சாலை வழியே அரசு வாகனங்கள் பறக்கிறதே தவிர வாழ்வை இழந்த மக்கள் இருக்கும் பகுதிகளை எவரும் எட்டி பார்க்கவில்லை 15 நாட்களாக முத்துப்பேட்டை முழுவதும் இருட்டிலேயே இருக்கிறது. பணப்பயிராக இருந்து வாழ்வழித்து கொண்டிருந்த அனைத்து மரங்களும் அடியோடு அழிந்து விட்டது. இந்த நேரத்தில் முகாம்களை வேறு காலி செய்ய கோரி அதிகாரிகள் வற்புறுத்துகிறார்கள். முகாம்களுக்கு அரிசி மட்டும் வழங்கப்படுகிறது. இலவசமாக மண்ணெண்ணெய் தருவோம் என்று அமைச்சர் கூறிய பிறகும் பணம் வசூலிப்பதாக மக்கள் கூறுகிறார்கள்.

கோடிக்கணக்கில் திருவாரூர் மாவட்டத்திற்கு வந்துள்ள நிவாரணப் பொருட்கள் கடைக்கோடிவரை செல்லுமா என்ற சந்தேகம் மக்களுக்கு எழுந்துள்ளது. இதன் காரணமாக யார் மக்களை சந்திக்க சென்றாலும் நம்பிக்கை இல்லாமல் பேசுகிறார்கள். எனவே தமிழக அரசு மத்திய அரசை வற்புறுத்தி நிவாரண தொகையை பெறுவதோடு தமிழக அரசம் இணைந்து மக்களின் துயர்துடைக்கவேண்டும்.

‘பளிச்’ சிடும் விளக்குகள்
முத்துப்பேட்டையை முடித்துக் கொண்டு இருள் சூழ்ந்த பாதையில் பயணித்து திருவாரூர் விளமல் கல்பாலம் அருகே வந்தபோது பகல் போன்ற தோற்றத்துடன் அதிக சக்தி கொண்ட மின் விளக்குகள் ஜொலித்து கொண்டிருந்தன. இங்கு பொதுப்பணித்துறை திட்ட இல்லம் பளிச்சென்று காட்சியளித்தது. முதல் நாள் மாலை போட்ட மின் விளக்குகள் 28 ஆம் தேதி புதன்கிழமை காலை 9.30 வரை எரிந்து கொண்டிருந்தது.

நன்றி: தீக்கதிர்