ஏமன் மீதான தாக்குதலை துவங்கியது சவூதி அரேபியா! வளைகுடாவில் பதற்றம்!

யேமன் நாட்டில் மூண்டுள்ள உள்நாட்டுக் கலவரம் உக்கிரமடைந்து, நிலைமை சிக்கலாகி வரும்  நிலையில், சவுதி அரேபியாவுடன் மேலும் 8 அரபு நாடுகளின் படைகளும் களத்தில் குதித்துள்ளன. விமானப்படையுடன், சவுதி ராணுவமும் தற்போது தாக்குதலில் இறங்கியுள்ளது.

அரேபிய நாடுகளிலேயே மிகவும் ஏழை நாடு யேமன் ஆகும். தற்போது அங்கு உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. ஹவுதி எனப்படும் ஷியா பிரிவு கிளர்ச்சியாளர்கள், அரசிற்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர்.

ஏதன் நகரைக் கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள கிளர்ச்சியாளர்கள், அங்குள்ள விமானதளம் ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.

அந்நாட்டு அதிபர் அபெத் ராபோ மன்சூர் ஹாதியின் மாளிகை மீதும் அடையாளம் தெரியாத போர் விமானங்கள் ராக்கெட் வீச்சு நடத்தியுள்ளன.

இத்தாக்குதல் எதிரொலியாக அதிபர் ஹாதி, தனது மாளிகையில் இருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஏமன் அரசு கேட்டுக் கொண்டதிற்கிணங்க அங்கு சவுதி அரேபியா கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரில் இறங்கியுள்ளது சவுதி அரேபியா. இத்தகவலை அமெரிக்காவுக்கான சவுதி தூதர் அடெல் அல்-ஜுபை ர் உறுதி செய்துள்ளார்.

கிளர்ச்சியாளர்களைக் குறி வைத்து சவுதி அரேபியா முதலில் வான்வெளித் தாக்குதலை ஆரம்பித்தது. இன்று அதிகாலை சனா நகரில் நடைபெற்ற தாக்குதலில், ஏமனுக்கு ஆதரவாக புரட்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சவுதி விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதாக அல் ஆலம் தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தற்போது விமானப்படையோடு தரைப்படையையும் போரில் ஈடுபடுத்தியுள்ளது சவுதி அரேபியா. இதற்கென் 100 போர் விமானங்கள், 1.5 லட்சத்திற்கும் அதிகமான போர் வீரர்கள் மற்றும் விமானப்படையை சவுதி அரேபியா ஏமனுக்கு அனுப்பி உள்ளதாக அல் அரேபியா செய்தியில் கூறப்பட்டுள்ளது.

எட்டு அரபு நாடுகளும் குதித்தன இந்தப் போரில் சவுதி தலைமையில் எகிப்து, மொராக்கோ, ஜோர்டான், சூடான், குவைத், ஐக்கிய அரபு நாடுகள், கத்தார் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட 8 அரபு நாடுகள் ஏமன் போரில் குதித்துள்ளன. புரட்சியாளர்களுக்கும், ஏமன் அரசுக்கும் இடையே நடைபெற்று வரும் இந்தப் போரில் இதுவரை 13க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக சனாவில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் அடக்கம் எனக் கூறப்படுகிறது. இந்தக் கிளர்ச்சியாளர்களுக்கு ஈரானின் ஆதரவு உள்ளது. சமீப காலமாக இந்த கிளர்ச்சியாளர்கள் தங்களது தாக்குதலை அதிகரித்து வருகின்றனர். இதன் காரணமாக அதிபர் தலைநகரை விட்டே வெளியேறும் நிலை ஏற்பட்டு விட்டது. உள்நாட்டுப் போர் எதிரொலியாக ஏமனில் உள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக நாடு திரும்புமாறு இந்தியா அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா ஏமன் தாக்குதல் தொடர்பாக இதுவரை வேறு எந்த நாட்டின் உதவியையும் சவுதி அரேபியா கேட்கவில்லை. ஆனால், உளவுத் தகவல்கள், செயற்கைக் கோள் படங்கள் உள்ளிட்டவற்றிற்காக அது அமெரிக்காவின் உதவியை நாடும் என எதிர்பார்க்கப் படுகிறது. இது தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் மீகன் கூறுகையில், ‘தொடர்ந்து சவுதிக்கு சரக்கு மற்றும் உளவுத்துறை தொடர்பான உதவிகளை அமெரிக்கா வழங்கும். ஆனால், தனிப்பட்ட முறையில் ராணுவ உதவிகள் எதையும் வழங்காது’ எனத் தெரிவித்துள்ளார்.

எண்ணெய் விலை உயர்வு:

இது ஒருபுறம் இருக்க, ஏமனில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஒரு சதவீதம் உயர்ந்துள்ளது.

Advertisement

Close