அஜ்மன் சாலை விபத்தில் சிக்கிய இந்தியருக்கு இரண்டரை கோடி ரூபாய் இழப்பீடு!

அரபு எமிரேட் நாடுகளில் மிகவும் சிறிய ஊரான அஜ்மனில் செய்தித்தாள் வினியோகஸ்தராக பணியாற்றி வந்த இந்தியரான அபூபக்கர் பள்ளியாலில் என்பவர் கடந்த  2013  ஆண்டு  செப்டம்பர்  மாதம்  இங்கு  நிகழ்ந்த சாலை விபத்தில் சிக்கினார்.

விபத்தில் படுகாயமடைந்த இவரது கழுத்தின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டதால் உடலின் செயல்பாடு முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. அவர் மீது மோதிய கார் தவறான பாதையில் இருந்து வேகமாக வந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திருமணமாகி மூன்றே மாதங்கள் ஆன நிலையில் வேலைக்கு சென்றபோது இந்த விபரீத  விபத்து நேர்ந்ததால் பாதிக்கப்பட்ட அபூபக்கர் பள்ளியாலில் கேரளாவில் உள்ள சொந்த ஊருக்கு திரும்பிவந்து சேர்ந்தார். சரியாக பேச முடியாமல் சில வேளைகளில் சுயநினைவை இழந்து விடும் அவருக்கு நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்கக்கோரி  அஜ்மன்  கோர்ட்டில்  வழக்கு நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. விபத்தில் பாதிக்கப்பட்டு  கழுத்துக்கு கீழே உடலுறுப்புகள் செயலிழந்துப்போய் இருக்கும் அபூபக்கர் பள்ளியாலிலுக்கு 15 லட்சம் திர்ஹம் இழப்பீடு வழங்கி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்குக்கான வக்கீல் சம்பளம் மற்றும் இதர செலவினங்கள் போக இழப்பீட்டு தொகையான  15  லட்சம் திர்ஹம் (இந்திய மதிப்புக்கு சுமார் 2 கோடியே 55 லட்சம் ரூபாய்)  அவரது  இந்திய  வங்கிக்  கணக்குக்கு மாற்றம் செய்யப்பட்டது.

Advertisement

Close