பிரச்சனைகள் பலவிதம்! காரணங்களும் தவிர்க்கும் முறைகளும்!

பிரச்சினைகள் என்பது அனைவருக்குமே அவரவர்கள் நிலைகளுக்கேற்ப ஏற்ப்பட்டு கொண்டுதான் இருக்கின்றது. பொருளாதார பிரச்சினையில் பெரும் அவதியுடன் காலத்தை தள்ளுபவர்கள் ஒருபுறமிருக்க, கடன் பிரச்சினைகளுடன் காலம் பூறாவும் கஷ்ட்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களும் இருக்கிறார்கள். சிலர் உடல்ரீதியான பல நோய்களுடன் சுழன்றுக் கொண்டிருக்க, வேறு சிலரோ குடும்பத்திற்க்குள் சரியான ஒற்றுமையில்லாமல் மனஸ்தாபங்களுடன் உழன்றுக் கொண்டிருப்பார்கள். சிலர் குடும்பங்களில் நடக்கும் அவமானங்களை வெளியே சொல்ல முடியாமல் நாகரிமாக நாட்களை தள்ளிக் கொண்டிருப்பார்கள். சிலர் சமுதாயத்தின் நலன் கருதி பலவற்றையும் நினைத்து வருந்திக் கொண்டிருப்பார்கள். இப்படி ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கிறது.

பல பிரச்சினைகள் அனைவரிடமும் சொல்ல கூடியதாகவும், சில பிரச்சினைகள் வெளியில் கூற இயலாதவாறும் அமைந்திருக்கும். பொதுவில் அனைவரிடமும் பகிர்ந்துக் கொள்ளும் பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு கிடைக்கிறதோ இல்லையோ, ஓரளவு ஆறுதலாவது கிடைக்கிறது. ஆனால் வெளியே தெரிந்தால் அவமானம் என மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பாத பிரச்சினைகளுக்கு ஏதோ ஒரு விதத்தில் விரைவில் தீர்வு கிடைத்தாலும் மனதினில் ஏற்பட்ட ரணம் எளிதில் மறைவதில்லை.
பெரும்பாலானவர்கள் அறிந்தோ அறியாமலோ தானாகவே பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். வசதியானவர்களை பார்த்து, அவர்கள் போலவே ‘தானும் வாழனும்’ என்பதற்காக, வசதியற்றவர்கள் அறிவின்மையோடு அவசர கோலத்தில் செயல்பட்டு கடன் மற்றும் பொருளாதார பிரச்சினைகளில் சிக்கிக் கொள்கிறார்கள். அவரவர்களின் பொருளாதார சூழலுக்கு தகுந்தவாறு மனசாட்சிக்கு விரோதமில்லாமல் தனது வாழ்க்கையை அமைத்து கொண்டார்களேயானால் அதிகமாக அவதிப்பட வேண்டியிருக்காது. மேலும் வருமானத்திற்கு தகுந்தாற்போல் செலவு செய்து குடும்பத்தை நிர்வகித்தோமேயானால் கஷ்ட்டங்களும், பிரச்சினைகளும் வெகுவாக குறையும்.
நோய் என்பது எப்போதும் யாருக்கும் வரக்கூடிய பிரச்சினையாகும். அதற்கு ஏழை, பணக்காரன் என்ற பேதமெல்லாம் தெரியாது. ஆனாலும் பெரும்பாலும் நோய் என்பது ஏழைகளை விட பணக்காரர்களிடமே அதிகம் சென்றடையும். காரணம் அவர்களின் உணவுமுறை மற்றும் உடல் உழைப்பின்மை ஆகும். அனைவரும் இதை உணர்ந்து செயல்பட்டாலே நோய் ஏற்படுவது வெகுவாக குறையும். அதுபோல தகுந்த எளிய சிகிச்சை முறைகளையெல்லாம் விட்டுவிட்டு, அனைவரும் காஸ்ட்லி மருத்துவ முறைகளையே நாடி போவதனால், இவ்வகையான பிரச்சினைகள் மற்றும் கடன்கள் அதிகரிக்கிறது.
‘தினம் ஒரு தகவல்’ என்ற தலைப்பில் ஏராளமான மருத்துவக் குறிப்புகளை கொடுத்து வரும் நமக்கு, அதற்குரிய ஆய்வுகளை மேற்க்கொள்ளும்போது, அரிய நோய்களுக்கும் மிக குறைந்த செலவிலான எளிய வைத்திய முறைகள் இருப்பதை கண்டு பிரமிப்பே ஏற்படுகிறது. அத்தகைய சிகிச்சையை மருத்துவர் மூலமும், இணையத்தின் மூலமும் அறிந்து, மேற்க்கொண்டு ஆரோக்கியம் பெறுவது மிகவும் பயனளிக்கும்.

அதுபோல குடும்பத்தில் நடக்கும் வெளியில் சொல்ல இயலாத பிரச்சினைகளானாலும் சரியே, அவைகளை தங்களுக்குள்ளேயே வைத்து அவதிப் பட்டுக் கொண்டிருக்காமல், நீங்கள் மதிக்கும் நல்லவர்களிடம் மனம்விட்டு பேசி, அவர்களின் ஆலோசனைகளையும், உதவிகளையும் பெற்று, அவைகளை தீர்க்க முயற்சியுங்கள். எந்த பிரச்சினைகளானாலும் அதற்குரிய தகுந்த நபர்களின் ஆலோசனைகளும் ஆதரவும் கிடைக்கும்பட்சத்தில் எளிதாக அவைகளை தவிர்க்கலாம். அதற்குமேலாக உங்கள் பிரச்சினைகளையும் மனச்சுமைகளையும் எல்லாம் வல்ல இறைவனிடத்தில் இறக்கி வையுங்கள். இன்ஷா அல்லாஹ் விரைவில் நிவாரனம் பெறுவீர்கள்.

Advertisement

Close