அதிரை பெற்றோர்களே… உங்கள் குழந்தைகளை விரட்டாதீர்கள்!

கோடை விடுமுறையை அறிவித்து விட்டார்கள். கடந்த 10 மாதங்களாக படிப்பு, தேர்வு, வீட்டுப்பாடம், டியூசன் என பெட்டிப்பாம்பாக அடைந்திருந்த மாணவர்கள் இந்த கோடை விடுமுறையில் சிறகடித்து சுதந்திர பறவைகளாக பறக்கத் தொடங்கிவிடுவார்கள். ஆனால், பெரும்பாலான பெற்றோர்கள், இந்த விடுமுறை காலங்களை திண்டாட்டமாகவே கருதுகின்றனர். கோடை விடுமுறையில் அவர்கள் செய்யும் குறும்புகளை பெற்றோர்களுக்கு ரசிக்கவும், பொறுத்துக்கொள்ளவும் கட்டுப்படுத்தவும் தெரியவில்லை.

இது ஒருபுறம் இருக்க, மறுபக்கம் “கோடை விடுமுறையை பயனுள்ள முறையில் செலவழிக்க வேண்டுமா?” என்ற விளம்பரங்களுடன் கம்பியூட்டர் கோர்ஸ் செண்டர்கள், இதர பயிற்சி நிறுவனங்களை நடத்துபவர்கள் ஆபர்களை அள்ளிவீச தொடங்கி விடுவார்கள். அதுபோல் பல பள்ளிகளிலும் தீனியாத் வகுப்புகள் துவங்கப்பட்டு விடும். இதனை வாய்ப்பாக கருதிய நமது பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கூடுதல் அறிவு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்களது சேட்டைகளில் இருந்த தப்பித்துக் கொள்வதற்காகவும், தப்பித்தோம் பிழைத்தோம் என இவற்றில் ஏதாவது ஒரு வகுப்பில் போய் சேர்த்து விடுகின்றனர். இவற்றில் தவறு உள்ளதாக நான் கூறவில்லை.

ஆனால், நம் குழந்தைகளை வெளியில் அனுப்பி அவர்கள் பலவற்றையும் கற்றுக்கொள்ள வேண்டும் என நினைக்கும் நாம், அவர்களுக்கு என்ன கற்றுக்கொடுத்தோம் என்பதே எனது கேள்வி? காரணம் பள்ளி காலங்களில் அதிகாலை எழுந்தவுடன் மதர்ஷா, அதன் பின்னர் பள்ளிக்கூடம், மாலை வந்தவுடன் டியூசன் என ஓய்வில்லாமல், ஓடிக்கொண்டிருக்கும் மாணவர்கள் பெற்றோர்களுடன் கழிக்கும் நேரம் என்பது மிகமிக குறைவாகவே. அவர்கள் ஓய்வெடுப்பதற்காகவும் அவர்கள் மனது அமைதியடைவதற்காகவும் அவர்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு தான் இந்த விடுமுறை.

ஒரு சிறுவன் பள்ளி ஆசிரியர்களிடமும், மதர்ஷா உஸ்தாத்களிடமும் கற்றுக்கொள்வதை விட தனது பெற்றோர்களிடம் கற்றுக்கொள்வது மிகவும் அவசியம். அந்த வகையிலே இந்த கோடை விடுமுறையை பெற்றோர்களும் ஒரு வாய்ப்பாக கருதி பிற வேலைகளை கொஞ்சம் தவிர்த்துவிட்டு உங்கள் பிள்ளைகளுடன் முடிந்தவரை நெருங்கி பழக முயற்சி செய்யலாம். ஏனெனில், தற்போதைய காலத்தில் கல்வியறிவு வளர்ந்தாலும், குடும்ப உறவுகளும், ஒழுக்கங்களும் பெருமளவில் அதில் போதிக்கப்படுவதில்லை. எனவே இந்த கோடை விடுமுறையில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வேறு வேறு வகுப்புகளுக்கு அனுப்பாமல் அவர்களுக்காக இந்த மாதத்தை நாம் செலவழிக்கலாம், அவர்களின் விருப்பத்தை அறிந்து அவர்களுக்கு பிடித்த துறையில் ஊக்குவிப்பதில் துவங்கி, குடும்ப உறவுகள் குறித்த புரிதலையும், யாரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற நெறிகளையும் போதிக்கலாம். பொருளாதார சிக்கனத்தையும், சேமிப்பையும், உணவின் முக்கியத்துவத்தையும் கூறலாம்.

பணம் என்றால் என்ன? வாழ்க்கைக்கு பணம் தேவையா? இல்லை பணத்திற்காக தான் நாம் வாழ்கிறோமா? என்பது பற்றிய புரிதலை அவர்களுக்கு ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும். சக மனிதர்களிடம் எப்படி நடந்துகொள்வது? உறவுகளை எப்படி பேணுவது என்பதை விளக்கலாம். ஏனெனில் பலர் நல்ல கல்வியறிவுடையவராக இருந்தாலும், இதுபோன்ற விசயங்களில் பின் தங்கிய நிலையிலேயே உள்ளனர். தற்போதைய காலத்தில் பெற்றோர்களின் ஆசைப்படி பிள்ளைகள் நல்ல நிலைக்கு வந்தாலும், அதன் பிறகு பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை மறந்து அவர்களை உதாசீனப்படுத்தும் நிலை அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பெற்றோர்கள் பிள்ளைகள் இடையிலான நீண்ட இடைவெளியும் புரிதலும் இல்லாததே..!

அதுபோன்று, பிள்ளைகளுக்கு பிடித்தது என்ன என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இந்த ஒரு மாதத்தில் அவர்கள் கேட்கும் பிடித்த உணவுகளை சமைக்கலாம், முடிந்தால் அவர்களுக்கு சமைப்பதையும் கற்றுக்கொடுக்கலாம். அதுபோல், குடும்ப கணக்கு வழக்குகளை அவர்களிடம் எழுத சொல்லலாம். இதனால் நாளடைவில் நமது குடும்பத்தின் நிலை இது தான் என்று அவர்களுக்கு புரிய வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகளுக்கு பிடித்த விருப்பமான துறை என்ன? அவர்கள் எந்த பாடத்தை ஆர்வமாக படிக்கின்றனர்? அவர்களின் திறமைகள் என்னென்ன என்பது குறித்த அறிந்து வைத்துக்கொண்டு அதற்கேற்ப அவர்களிடம் சிறிய சிறிய போட்டிகள் நடத்தி அன்பளிப்பை வழங்கலாம். குறிப்பாக அவர்களிடம் பிறருடைய பிள்ளைகளை வைத்து ஒப்பிடுவதை தவிர்த்துக்கொள்ளுதல் நலம். அதே போல் அவர்களின் குறைகளை பொறுமையாக கலைவதற்க்கு நாம் முயற்சி செய்யவேண்டும்.

பிள்ளைகள் உங்களிடம் தைரியமாக பேசக்கூடிய ஒரு சூழலை ஏற்படுத்தி தினமும் அவர்களிடம் அவர்களின் மனதில் உள்ள சந்தேகங்களையும் கேள்விகளையும் கேட்க சொல்லலாம். அதன் மூலம் அவர்களின் ஆக்கத்திறன் மற்றும் சிந்தனைத் திறன் அதிகரிக்கும். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நமக்கு பதில் கிடைக்காவிட்டால் இணையதளதின் மூலமாகவோ அல்லது புத்தகத்தின் மூலமாகவோ அதற்கான பதிலை கண்டறிந்து விளக்கம் அளிக்க வேண்டும். இந்த விடுமுறையில் உங்கள் பிள்ளைகள் வெளியில் விளையாடி விட்டு வந்தால் அவர்களிடம் அதுகுறித்த அனுபவத்தை கேட்கலாம். உதாரணத்துக்கு அவர்கள் கிரிக்கெட் விளையாடினால், அவர்கள் மட்டையாளரா பந்துவீச்சாளரா? இன்று எத்தனை ரன்கள் எடுத்தாய் என்பது போன்ற கேள்விகளை கேட்கலாம். அதுபோல் அவர்களுடன் விளையாடும் நண்பர்களையும் வீட்டுக்கு அழைத்து நம் பிள்ளைகள் போல சகஜமாக பேசி ஆலோசனை வழங்கலாம். இதன், மூலம் நம் பிள்ளைக்கு தவறான நண்பர்களின் பழக்கம் இல்லாமல் போகும். அதுபோல், நம் பிள்ளை செய்யாத தவற்றை ஒருவர் உங்களிடம் சொன்னால், அதனை உடனடியாக நம்பிவிடாமல் நம் பிள்ளையை விட்டுக்கொடுக்காமல் பேச வேண்டும். அப்படி செய்தால் நமக்கு ஒன்று என்றால் நம் பெற்றோர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கை ஏற்படும். மொத்தத்தில் நாம் அவர்களுக்கு ஒரு ஹீரோவாக, தோழனாக, ஆசிரியராக எல்லாமுமாக இருக்கவேண்டும்.

உங்கள் பிள்ளைகள் வெளியில் கற்றுகொள்ள வேண்டியதை விட வீட்டிற்குள் கற்றுகொள்ள வேண்டியது அதிகம் உள்ளது. அதற்கு இந்த கோடை விடுமுறையை அனைவரும் பயன்படுத்திகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த கட்டுரை…

ஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி

Close