Adirai pirai
islam இந்தியா தமிழகம்

இந்திய கடற்படையால் கைவிடப்பட்ட தமிழக மீனவர்களை காப்பாற்றிய பாகிஸ்தான் கடற்படை

குமரி மாவட்டம் குளச்சல் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்கள், ஆழ்கடலில் மீன்பிடிக்க சில தினங்களுக்கு முன்னர் கடலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் சென்ற படகின் எஞ்சின் பழுதானதால், நடுக்கடலில் எந்தவித உதவியும் கிடைக்காமல் 9 நாட்களாக தவித்துள்ளனர். அப்போது, அந்த வழியாக ஏடன் வளைகுடா பகுதியில் பாகிஸ்தான் கடற்படையைச் சேர்ந்த அலிம்கர் படகு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது உதவி கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் படகை பாகிஸ்தான் கடற்படையினர் மீட்டுள்ளனர்.

அத்துடன் ஒரு வாரத்திற்கும் மேலாக உணவு, குடிநீர் இல்லாமல் இருந்த மீனவர்களுக்கு பாகிஸ்தான் வீரர்கள் உதவி அளித்து நெகிழச் செய்துள்ளதுடன், அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து அவர்களது படகு எஞ்சினையும் பழுதுபார்த்து அனுப்பியுள்ளனர். கடலில் சிக்கித்தவித்த மீனவர்கள் இந்திய கடற்படைக்கு தகவலளித்தும் எந்தவிதமான உதவியும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர். மனிதநேய அடிப்படையில் இந்த உதவியைச் செய்ததாக கூறியிருக்கும் பாகிஸ்தான் கடற்படைக்கு, தமிழக மீனவர்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.

விமர்சனம்:

இந்திய அரசால் நட்பு நாடாக சித்தரிக்கப்படும் இலங்கையின் கடற்படை தமிழக மீனவர்களை படாதபாடு படுத்தி வருகிறது. இதற்கு ஒரு படி மேலே போய் இந்திய கடற்படையே தமிழக மீனவர்களை தாக்கியதும் அண்மையில் அரங்கேறியது. ஆனால், இந்திய அரசால் எதிரி நாடாக சித்தரிக்கப்படும் பாகிஸ்தான் கடற்படை தமிழக மீனவர்களுக்கு உதவி செய்துள்ளனர். இதன் மூலம் நாம் உணர்ந்துகொள்ள வேண்டிய பாடம் என்னவெனில், இரு நாடுகளிடையே பகைமை ஏற்படுத்தி அரசியல் லாபம் ஈட்ட நினைக்கும் அரசியல் வியாதிகளே நமக்கு எதிரிகளே அன்று, அந்நாட்டு மக்கள் இல்லை.