Adirai pirai
உள்ளூர் செய்திகள் தமிழகம்

உதவி செய்வது போல் நடித்து பெண்களை நெருங்கும் கணவனின் நண்பர்கள்… அதிரையிலும் நடக்கிறது!

எதையுமே ஆரம்பத்திலேயே ஆராய்ந்து யோசித்து முடிவெடுக்காமல், ஏடாகூடம் ஆன பிறகுதான் புத்தி வருகிறது சில பெண்களுக்கு. எல்லாம் நடந்து முடிந்தபிறகு, எல்லாவற்றையும் இழந்த பிறகு, கடைசியில் உட்கார்ந்துகொண்டு அழுவதும், புகார் சொல்வதும், சில பெண்களுக்கு வேலையாகி போய்விட்டது. அப்படித்தான் ஒரு பெண் தஞ்சை போலீசில் புகார் கொடுத்து புலம்பி கொண்டிருக்கிறார்.

ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு பகுதி வடக்கு கோட்டையை சேர்ந்த தம்பதி ராமு-ரம்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இருவரும் ஒருவரையொருவர் உயிருக்குயிராக விரும்பி திருமணமும் செய்து கொண்டனர். இதில் ரம்யா பி.எஸ்.சி பே‌ஷன் டெக்னாலஜி படித்தவர். இவர்களது காதல் கல்யாணத்துக்கு உதவியது ராமுவின் நண்பர் அன்பரசன் என்பவர்தான். அன்பரசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இன்னும் திருமணமாகவில்லை.

இந்நிலையில் ராமுவுக்கு லண்டனில் வேலை கிடைத்துவிடவே திருமணமான சில மாதங்களிலேயே கிளம்பி சென்றுவிட்டார். இதனால் ரம்யா வெள்ளூரில் உள்ள தன் வீட்டில் இருந்துள்ளார். இப்போதுதான் நண்பன் என்ற ரூபத்தில் திரிந்த அந்த வக்கீல் அன்பரசன் தனது வேலையை காட்ட துவங்கினார். ரம்யாவிடம் முதலில் போனில் பேச ஆரம்பித்தார். பின்னர் சென்னைக்கு வரவழைத்து ஒரு ப்யூட்டி பார்லரில் வேலையும் வாங்கி தந்து, ரம்யா மீது ரொம்ப அக்கறை போல காட்டிக் கொண்டார். இதில் ரம்யா விழுந்துவிட்டார்.

அன்பரசன் எங்கே வெளியே கூப்பிட்டாலும் போவது, வருவதுமாகவே இருந்துள்ளார். இருவரிடமும் நெருக்கமும் அதிகமானது. இருவரும் நெருக்கமாக இருந்த கன்றாவிகளை தனது செல்போனில் படம் பிடித்தும் வைத்து கொண்டார் அன்பரசன். இது எதுவுமே தெரியாத ரம்யாவுக்கு, தனது வாழ்வே அன்பரசன் என்பதுபோல ஆகிவிட்டது. அன்பரசனும் ரம்யாவை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டார்.

இந்நிலையில் அன்பரசனும் தானும் நெருக்கமாக இருந்த காட்சிகளை அன்பரசன் செல்போனில் பார்த்து விட்டார் ரம்யா அதிர்ந்து போனார். அன்பரசனின் சுயரூபம் தெரிந்து சென்னையை விட்டு கிளம்பி தன் ஊருக்கே சென்றுவிட்டார் ரம்யா. அங்கு தன் குடும்பத்தினரிடம் சொல்லி அழுதார். அப்போதும் அன்பரசன் விடவில்லை. ரம்யாவின் ஊருக்கு வந்துவிட்டார். “நான் உனக்கு இதுவரை இரண்டரை லட்சம் செலவு செய்திருக்கேன். அது எல்லாத்தையும் திருப்பி கொடு. இல்லாட்டி செல்போனில் நம்மை ஆபாசமா பிடிச்ச வீடியோவை உன் புருஷனுக்கும், இண்டர்நெட்டிலும் அனுப்பிடுவேன்” என்று மிரட்டினார்.

ரம்யாவை அன்பரசன் மிரட்டியதை கண்ட, ரம்யாவின் குடும்பத்தார் அன்பரசனிடமிருந்த 2 செல்போன்கள், அதிலிருந்த சிம் கார்டு எடுத்து கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த அன்பரசன், நேராக பாப்பாநாடு போலீசில் புகார் கொடுத்தார். ஒரு பெண்ணை ஏமாற்றிய அன்பரசனே புகார் கொடுக்கும்போது, அவரிடம் ஏமாந்த ரம்யா சும்மா இருப்பாரா என்ன? அவரும் பதிலுக்கு, அன்பரசன் தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டுவதாக புகார் கொடுத்தார்.

ஆனால் என்ன ஆனதோ, போலீசார் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை, இருவரது புகார்கள் குறித்தும் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ரம்யா தஞ்சை டிஐஜி, எஸ்.பி- ஆகியோருக்கு புகார் கொடுத்தார். இப்போது போலீசார் நடவடிக்கை எடுத்து விசாரணையை துவக்கினர். அப்போது அன்பரசன் ஆபாச வீடியோ எடுத்ததும், அதை தனது லேப்-டாப்பில் பதிவேற்றி கொண்டதும் கண்டறிந்தனர். ரம்யா டிஐஜி., எஸ்,பி., ஆகியோரிடம் புகார் கொடுக்க சென்றதுமே அன்பரசன் எஸ்கேப். எனவே போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

வெளிநாட்டிலிருந்து கணவர் கஷ்டப்பட்டு உழைத்து அனுப்பும் பணத்தை மட்டும வாங்கிக்கொண்டு, கணவனுக்கு துரோகம் செய்தால் வேறு என்ன மாதிரி கூலி கிடைக்கும்? பெண்ணுக்கு வேலி அவசியம். வேலி இல்லாத நிலையில் தனக்குத்தானே வேலியை அமைத்து கொண்டு வாழ்வது இக்காலகட்டத்தில் மிகவும் முக்கியம். இல்லையென்றால் வேலி தாண்டும் வெள்ளாடுகளுக்கு பரிதாப நிலைதான் ஏற்படும்! ரம்யா இன்னும் ஒரு உதாரணம், அவ்வளவே.

இதுபோல் அதிரையிலும் பல சம்பவங்கள் அண்மை காலங்களில் அரங்கேறி வருகிறது என்பது தான் நம்மை அதிரை வைக்கும் உண்மை.